தமிழ் ராசிபலன் 2013 | Varuda Rasi Palan 2013 Puthandu in Tamil Language | - Trend Speaks

Thursday, December 20, 2012

தமிழ் ராசிபலன் 2013 | Varuda Rasi Palan 2013 Puthandu in Tamil Language |

நந்தன வருடம், மார்கழி மாதம் 16-ஆம் தேதி, திங்கட்கிழமை (31-12-2012) நள்ளிரவு 12.00 மணிக்கு, ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி உதயமாகிறது. சதுர்த்தி திதி, ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம், கடக ராசி, கன்னியா லக்னத்தில் ஆங்கில வருடம் பிறக்கிறது. தேதி எண் 1; கூட்டு எண் 8.

எனவே இந்த வருடம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கும், கடக ராசிக்காரர்களுக்கும், கன்னியா லக்னத்துக்காரர் களுக்கும், பெயர் எண் அல்லது தேதி எண் 1 அல்லது 8 அமைந்த வர்களுக்கும் 2013-ன் கூட்டுத் தொகை 6 என்பதால் 6-ஆம் எண்காரர் களுக்கும் புது வருடம் பொலிவு தரும் வருடமாகவும், மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும். வருடமாகவும் அமையும். எப்போதும் ஆங்கிலப் புது வருடம் கன்னியா லக்னத்தில்தான் பிறக்கும். ஆனால் நட்சத்திரம், ராசி மட்டும் மாறும்.

ஆயில்ய நட்சத்திரத்தில் 2013 பிறப்பதால் ஆயில்யம், கேட்டை, ரேவதி (ஜென்மம்-அனுஜென்மம்-திரிஜென்மம்)நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கெல்லாம் சிறந்த பலன்களைத் தரும் வருடமாகத் திகழும். மேலும் கடக ராசியோடு கடக லக்னத்தில் பிறந்தவர் களுக்கும், கன்னியா லக்னத்தோடு கன்னியா ராசியில் பிறந்தவர் களுக்கும், மிதுன ராசி மிதுன லக்னத்தாருக்கும் இந்தப் புது வருடம் இனிய வருடமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடக ராசிநாதன் இனிய சந்திரன் கடகத்தில் ஆட்சி பெறுவது இந்த வருடத்தின் சிறப்பு அம்சமாகும். அதேபோல கன்னியா லக்னாதிபதி புதன் 4-ல் குரு வீட்டில் கேந்திர பலம் பெறுவது சிறப்பு.

2012-ல் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும், மின்சார வசதிக்கும் மிகமிக கஷ்டப்பட்டு நொந்து நூலாகிப்போனார்கள். 2012 ஆண்டு பலனில் இதை விளக்கி எழுதியிருந்தேன்.

"மக்களின் வாழ்க்கையில் சௌகர்யக் குறைவையும், வசதி வாய்ப்புகளில் பிரச்சினைகளையும் அதிக அளவில் சந்திக்க நேரும். உதாரணமாக பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்சாரப் பற்றாக்குறை, கேஸ், பெட்ரோல் விலை உயர்வு, மளிகைப் பொருள் உயர்வு, இப்படி அன்றாட அத்தியாவசிய தேவைப் பொருட்களின் விலை உயர்வும் தட்டுப்பாடும் மக்களை மயங்கச் செய்யும்' என்று 2012 ஆண்டு பலனில் எழுதி இருந்தேன். இவையெல்லாமே நூற்றுக்கு நூறு நடந்துவிட்டது.

அதுமட்டுமல்ல; "தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லை. ஆனால் அடிக்கடி மந்திரி சபை மாற்றம் ஏற்படலாம். மந்திரி பதவியில் இருப்பவர்கள் விடிந்து எழுந்ததும் வாசலில் போலீஸ் பாதுகாப்பு- செக்யூரிட்டி இருக்கிறதா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டுத்தான் பல் தேய்க்கப் போவார்கள்' என்றும்; "முந்தைய அரசின் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கெடுபிடி நடவடிக்கைகள் அதிகமாகும்' என்றும் எழுதியிருந்தேன். இதுவும் அப்படியே நடந்தது.

மத்திய அரசில் நெருக்கடிகள் மிகமிக அதிகமாகக் காணப்படும் என்றும்; கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்துவரும் மற்ற கட்சித் தலைவர்கள் அடிக்கடி பயமுறுத்துவதும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் எழுதியிருந்தேன். (உதாரணம்- மம்தாபானர்ஜி). மறுதேர்தல் அறிவிப்பு வரை தற்போதைய மத்திய அரசுக்கு ஆபத்து ஏதும் வர வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். அப்படியே மத்திய அரசு நித்திய கண்டம் பூரண ஆயுசாக தப்பிவிட்டது.

வரும் 2013 புது ஆண்டிலும் விலைவாசி ஏற்றம், மளிகைப் பொருள், பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றம், தங்கம், வெள்ளி விலை உயர்வு, போன்றவை தொடர்கதைதான்.

இவ்வருடம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு (2013- மே) மத்திய- பாராளுமன்றத் தேர்தல் வரும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க இடமில்லை. ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி கூட்டணிக் கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமரும். பழைய ஆளும் கட்சி எதிர்கட்சியாகவும், புதிய கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம் வராது. ஆனாலும் கடந்த வருடம்போல மந்திரிகளை மாற்றுவதும் இலாகாக்களை மாற்றுவதுமாக துக்ளக் அரசு நடவடிக்கைகளாக அமையும். அரசு வார்த்தையளவில் நல்ல நல்ல திட்டங்களை வெளியிடுமே தவிர, செயல் வடிவில் இடம் பெறுவதும் எதிர்பார்க்க முடியாத அம்சம் ஆகும். அப்படியே ஒருசில திட்டங்கள் செயல்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களைப் போய் சேருவதும் கஷ்டம்! இந்த வருடம் கடந்த வருடம்போல மின்வெட்டு அதிகம் இருக்காது. கூடங்குளம் அணுமின் உற்பத்தியும் சூரிய கதிர் மின் உற்பத்தியும் (சோலார்) பற்றாக்குறையைச் சரிக்கட்டும்.

2009-ல் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அடுத்து வரும் தேர்தலில் மாற்றுக் கூட்டணி அமைத்துப் போட்டி யிடும். எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி பலம் கிடைக்காது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணி குதிரை பேரம் நடத்தும்.

கடந்த பத்தாண்டுகளாக பல முறைகேடுகளினால் தொழில் செய்து திடீர் குபேரனாகிய கோடீஸ்வர தொழிலதிபர்கள் தண்டனைக்காளாகி, சொத்து சுகங்களிலும் இழப்புகளைச் சந்தித்து விலாசம் இல்லாதவர்களாக ஓரம்கட்டப்படுவார்கள். மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஆலோசனை செய்தாலும், மாற்று வருமான வழிகளை முறையாகத் திட்டமிட முடியாத நிலையில் மதில்மேல் பூனையாகத் தயங்கும்.

புயல், சூறாவளி, கடும் மழை, இடி, மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், விபத்துகளாலும், அக்னி பயம்- பட்டாசு ஆலை விபத்து போன்றவற்றினாலும் உயிர்பலிகள் அதிகம் ஏற்படலாம். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களும் சர்வசாதாரணமாக நடக்கும். நீர்வளம்- மழைவளம் வரும் ஆண்டில் பஞ்சம் இருக்காது. விவசாயம் செழிப்பாக இருந்தாலும், அரிசி விலை ஏற்றமாகவே இருக்கும். கல்வி நிலையங்கள், நிதி நிறுவனங்கள், குவாரி தொழில் ஸ்தாபனங்கள், ஈமுகோழி நிறுவனங் கள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஆகியவற்றில் அரசின் கெடுபிடி நடவடிக்கைகள் உண்டாகும். இவற்றில் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

வருட லக்னம் கன்னிக்கு 9-ஆம் இடத்து குரு பார்வை கிடைப்பதாலும், லக்னாதிபதி புதன் குரு வீட்டில் சூரியனோடு சம்பந்தப்பட்டு சனி- ராகு பார்வையைப் பெறுவதாலும் ஆன்மிகம் தழைக்கும். மக்களுக்கு பக்தி வழிபாடு உண்டாகும். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பெருகும். பிரதோஷம், பைரவ அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி- அமாவாசை வழிபாடு, கிருத்திகை, ஏகாதசி போன்ற விரத வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் சிறப்பாகச் செயல்படும். ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். உண்மையான ஆன்மிகவாதிகளுக்கும் மடாதிபதிகளுக்கும் மரியாதை மிகும். போலி மதவாதிகளுக்கும் மடாதிபதிகளுக்கும் சட்டம் பாயும். சிலர் தலைமறைவாகலாம். சிலர் வெளிநாட்டுக்குத் தப்பிப் போகலாம். சிலர் தண்டனைக்காளாகலாம். லக்னத்துக்கு 2-ல் உச்ச சனியும், ராகு சம்பந்தமும் இருப்பதால் பங்கு மார்க்கெட் நிலவரம் வருட முற்பகுதியில் மந்தகதியாகவும், பிறகு உச்ச கதியாகவும் லாபகரமாகவும் அமையும்.

2013- ஆகஸ்டு மாதம் கடகத்தில் செவ்வாய் நீசமாகவும், அவருக்கு 4-ல் சனி உச்சமாகவும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது தோஷம். தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு கண்டம் ஏற்பட இடமுண்டு. (அக்டோபர் வரை). தீவிரவாதிகளின் பயங்கர சதிவேலைகளினால் வெடிகுண்டு விபத்துகளும் பலிகளும் ஏற்படலாம். சில இடங்களில் நிலநடுக்கம் போன்ற சம்பவங்களும் நடக்கலாம். தென்இலங்கையில் சிங்கள அரசால் தமிழர்களுக்கு ஆபத்தும் சங்கடங்களும் உண்டாக இடமுண்டு. அங்கு உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம்.

2013- மே மாதம் குருப்பெயர்ச்சி. ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு மாறுவார். வருட லக்னத்துக்கு குரு 10-ல் அமர்ந்து 2-ல் உச்சம் பெற்ற சனியைப் பார்க்கப் போகிறார். தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகளில் மின் வெட்டு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். இயந்திரத் தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகும். நூல்ஆலைகள், சாயப்பட்டறைகளில் உற்பத்தி மேன்மை யடையவும், தொழிலாளர்களின் வறுமை, கஷ்டம் நீங்கவும் வாய்ப்பு உருவாகும். நெசவுத் தொழிலும் முன்னேற்றமடையும். வித்யா காரகன் புதன் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் கல்வி மேன்மையும் கல்வி ஸ்தாபனங்களில் சாதாரண ஏழை எளியோருக்கும் இடம் கிடைக்கவும் யோகம் ஏற்படும்.

கஷ்டங்களைத் தீர்க்கவும் மனசாந்தி பெறவும் மக்கள் பக்தி சிந்தனையோடு இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்கும் முக்கியத்துவம் உண்டாகும். அதேசமயம் சனியும் ராகுவும் வருட லக்னத்துக்கு 2-ல் சேர்ந்திருக்க கேது பார்ப்பதால், இரு துறையிலும் வியாபார நோக்கோடு செயல்படுகிறவர்களும், சம்பாதிக்கும் எண்ணம் கொண்டு விளம்பரம் செய்து வகுப்புகள் நடத்துகிறவர்களும் பெருகுவார்கள். அசல் எது போலி எது என்று மக்கள்தான் அடையாளம் கண்டுகொண்டு சுதாரிக்க வேண்டும். என்றைக்கும் சத்தியத்துக்கு அழிவில்லை. "சத்தியமேவ ஜெயதே'- "வாய்மையே வெல்லும்'. கிரகங்களின் சோதனைகளையும் வேதனைகளையும் ஜெயிக்க அவரவர்களும் ஆன்மார்த்தமான பக்தி பிரார்த்தனை செய்வது அவசியம். அதேபோல சித்தர்களும் மகான்களும் எங்கெங்கு ஜீவசமாதியாக விளங்குகிறார்களோ, அங்கெல்லாம் சென்று உங்கள் குறைகளை முறையிட்டு வேண்டுங்கள். உங்கள் துன்பங்களைப் போக்கி வினைப்பயனை நீக்கி இன்ப வாழ்வுக்கு வழி கிடைக்கும். இருண்ட வாழ்வுக்கு ஒளி கிடைக்கும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.